மண் என்றால் ரொம்ப புடிக்கும்”..! – 40 ஆண்டுகளாக மண் மட்டுமே, சாப்பிட்டு உயிர் வாழும் பாட்டி..!

தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மூதாட்டி மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சூசைநகரில் மரியசெல்வம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவருக்கு வயது 85. இவரின் கணவர் சுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந்துவி ட்டார். இவருக்கு ராஜமணி, ராஜகனி என்ற 2 மகன்களும் கனி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளி ஊர்களில் வசித்து வருகின்றனர்.எனவே மூதாட்டி மரியசெல்வம் தனியாக வசித்து வருகிறார்.

பிழைப்புக்கு வழி தெரியாமல் சாலையோரங்களில் கிடைக்கும் பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்பு, கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து பழைய இரும்புக்கடைகளில் விற்று அன்றாட வாழ்கையை நடத்தி வருகிறார்.

இவருக்கு சிறு வயது முதலே மண் என்றால் அலாதி பிரியமாம். அதனை அப்படியே எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டு விடுவாராம். நாளடைவில் அதனையே உணவாக உட்கொள்ளவும் ஆரம்பித்து விட்டார் மரியசெல்வம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்தும் மண் சாப்பிடுவதை மரியசெல்வம் நிறுத்தவில்லை. மழை காலங்களில் வெளியில் சென்று மண் எடுக்க முடியாது என்பதால் வீட்டில் மணலை சேகரித்து வைத்து பின் அதனை சல்லடை வைத்து சலித்து சாப்பிடுகிறார்.

இருப்பினும் மரியசெல்வம் மூதாட்டிக்கு உடல் நலக்குறைவு எதுவும் ஏற்பட்டதில்லை. தள்ளாத வயதிலும் அசராமல் மண் சாப்பிட்டு கம்பீரமாக நடைபோட்டு உலா வரும் மூதாட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடனேயே பார்க்கிறார்கள்.

பிபிசி தமிழிடம் பேசிய மூதாட்டி மரியசெல்வம் “எனக்கு சிறு வயது முதலே மண் சாப்பிட மிகவும் பிடிக்கும். பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரிக்கச் செல்லும்போது பையில் செங்கல் பொடி மற்றும் மண்ணை சேகரித்து வீட்டிற்கு எடுத்து வருவேன். அதன்பிறகு வீட்டில் உள்ள சல்லடையில் மண்ணை அரித்து மாவு போல் சலித்து வைத்து கொள்வேன். காலை மற்றும் மதிய வேளையில் மண்தான் எனக்கு உணவு.

நான் கடந்த 40 ஆண்டுகளாக மண் சாப்பிட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கு இதனால் எந்தவொரு உடல் உபாதையும் ஏற்பட்டது கிடையாது. நான் சில நேரங்களில் இரவு வேளையில் அரிசி சோறு சாப்பிடுவேன். ஆனால் எனக்கு பிடித்த உணவு மண் என்பதால் மண் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். மண் சாப்பிடுவதால் உடல் உபாதைகள் வந்தால் வாழைப் பழம் சாப்பிட்டு சரி செய்து கொள்வேன். நான் இதுவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்ததில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.

நான் வசிக்கும் பகுதி கடற்கரை அருகில் உள்ளதால் சாலை ஓரங்களில் உள்ள மண் உப்பாக இருக்கும். எனவே செம்மண் எங்கு கிடைக்கிறதோ அதனை தேடி சேகரித்து விரும்பி சாப்பிடுவேன்” என்றார்.

மூதாட்டி மண் சாப்பிடுவது குறித்து அவரது பக்கத்து வீட்டுகாரர் பரஞ்ஜோதியிடம் கேட்ட போது, 40 வது வருடங்களாக மரியசெல்வம் மண் சாப்பிட்டு வருவதாக கூறுகிறார்.

“எங்கள் தெருவில் உள்ள மண்னை எடுத்து சாப்பிட்டதில் எங்கள் தெருவில் மண் இல்லாமல் போனது. எனவே பக்கத்தில் உள்ள துறைமுக ஊழியர் குடியிருப்பு பகுதியில் இருந்து மண்னை சேகரித்து வைத்து சாப்பிட்டு வருகிறார். அங்கு வசிக்கும் மக்கள் மண் சாப்பிட வேண்டாம் என பல முறை கூறியும் கேட்கவில்லை. எனது வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதியில் தான் மலம் கழிக்க வருவார். அப்போது அவருடைய மலம் மண் போன்று இருக்கும். அதை நானே பார்த்துள்ளேன்” என்கிறார் பரஞ்ஜோதி.

இது குறித்து அப்பகுதி இளைஞர் முத்துகண்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் சிறு வயதில் இருந்து இந்த பாட்டி மண் சாப்பிடுவதை பார்த்து இருக்கிறேன். நொறுக்குத் தீனி போல மண் சாப்பிடுகிறார். காலையில் பழைய பேப்பர் சேகரிக்க சென்று விட்டு பின் மாலை வீடு திரும்பும் போது மண்னை சேகரித்து வந்து வீட்டில் வைத்து சாப்பிடுவார். இப்படி தினசரி மண் சாப்பிடும் இந்த பாட்டிக்கு உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படாமல் இருப்பதை பார்க்கும் போது எங்கள் தெருவில் உள்ள இளைஞர்களுக்கு வியப்பாக உள்ளது” எனக் கூறினார்.

இந்த மூதாட்டி மண் சாப்பிடுவது குறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவாஹர்லாலிடம் கேட்ட போது, மண் சாப்பிடுவது என்பது ஒரு மன நோய் என்கிறார்.

“இது ஆங்கிலத்தில் PICA என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. இவ்வாறான மன நோயாளிகள் மனிதர்கள் எதை சாப்பிடக் கூடாதோ அவ்வாறான பொருட்களை சாப்பிடுவார்கள். மண், முடி, அழுக்கு, உள்ளிட்டவைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கண்ணாடி சில்லுகள், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை சாப்பிட்டு, பின்னர் மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் அவர்கள் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. உதாரணமாக சில கர்ப்பினி பெண்கள் கர்ப்ப காலத்தில் சாம்பல் சாப்பிடுவார்கள்” என்று கூறுகிறார்

இவ்வாறான நேயாளிகள் மண் அல்லது கண்ணாடி பொருட்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ முடியாது என்றும் அதற்கு காரணம் நாம் உயிர் வாழ உடலுக்கு சக்தி (Carbohydrate,Protein)தேவை என்பதால் உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆனால், இந்த மன நோயின் காரணமாக தொடர்ச்சியாக அவர்களால் உணவு எடுத்து கொள்ள முடியாததால் அவ்வப்போது மட்டும் உணவு சாப்பிடுவார்கள் என்றார் ஜவாஹர்லால் .

 

Comments are closed.